புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டம் வருகின்றனர். நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கள்கிழமையும் மணிப்பூர் விவகாரத்தால் இரு அவைகளிலும் முடங்கின. முன்னதாக நேற்று அவைத் தலைவரின் உத்தரவுகளை தொடர்ந்து மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்தக் கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அந்த நிலையிலும் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் அவையின் மையத்துக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை அவரது இருக்கையில் சென்று அமருமாறு அவைத் தலைவர் கூறினார். ஆனாலும், அவர் தொடர்ந்து முழக்கமிடவே சஞ்சய் சிங்கின் பெயரினை அவைத் தலைவர் தன்கர் அழைத்தார். இதனைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று பியூஷ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் இந்த கூட்டத்தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நள்ளிரவை தாண்டியும் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.