பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று மாலையில் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்து அளித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதனால் சர்வதேச விமான நிலையம், கூட்டம் நடைபெறும் தாஜ் வெஸ்ட்எண்ட் நட்சத்திர விடுதி, காங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பெங்களூரு வந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் அமைச்சர்களும் வரவேற்றன‌ர்

தமிழகத்தில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரை கர்நாடக அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்த தலைவர்கள் தங்குவதற்காக கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதியில் சொகுசு அறைகள் ஒதுக்கப்பட்டன. நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் அங்கேயே தங்கினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சதாசிவநகரில் உள்ள தனது சகோதரி செல்வியின் இல்லத்தில் தங்கினார்.

60 வகையான உணவு: உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியா காந்தி, நேற்று நடந்த 2-வது கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு வந்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் உற்சாகமாக பேசி வரவேற்றார்.

ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் 26 கட்சிகளின் 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மாலை 7 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 26 கட்சிகளின் தலைவர்களை வரவேற்று உரையாற்றினார். பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கூட்டணியில் முக்கியத்துவம் குறித்து பேசினர். பின்னர் 26 கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி 60 வகையான உணவு அடங்கிய இரவு விருந்து வழங்கி உபசரித்தார்.

இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து பொது செயல் திட்டம் உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பொது வேட்பாளர், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டும் எனத் தெரிகிறது.

சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் எங்களால் கூட்டணி அமைக்க முடியாது. கடந்த தேர்தல்களில் அவர்களை எதிர்த்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு பிற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம்” என்றார்.