புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் எதிர்க்கட்சிகளின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் ஆட்டத்தையே மாற்றி அமைக்கும் கூட்டமாக இருக்கும், பாஜகவுக்கு எதிரான வலுவான எதிரணியை உருவாக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தின் காரணமாகவே பாஜக பிளவுபட்ட கட்சிகள் சிலவற்றை ஒன்று சேர்த்துக் கொண்டு எண்கள் வித்தை காட்ட முயற்சிக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் சமாளிக்க நான் ஒருவனே போதும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியிருக்கிறாரே, அப்புறம் ஏன் 30 கட்சிகளை அவர் ஒன்றிணைக்கிறார். அவர் ஒருங்கிணைத்துள்ள இந்த 30 கட்சிகளும் எவை? அவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இருக்கின்றதா?" என்று வினவியுள்ளார்.வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில், கடந்த ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் செய்து வருகிறார். இந்தக் கூட்டத்தில் 24-க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன.
நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்: 'யுனைடட் வீ ஸ்டாண்ட்' - நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் வேணுகோபால் கூறுகையில், "நாங்கள் ஒரு காரணத்துக்காக ஒன்றிணைந்துள்ளோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அரசியல் சாசன உரிமைகளைப் பேண, பல்வேறு அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்ய ஒன்றிணைந்துள்ளோம். இவையெல்லாம் பாஜக ஆட்சியின் கீழ் இவையெல்லாம் பலத்த சேதமடைந்துள்ளன" என்றார்.