புதுடெல்லி: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக தலைமை வியூகம் வகுத்துள்ளது.

Sponsored

कृष्णा हाइट्स - कोटा

कृष्णा हाइट्स की ओर सभी कोटा एवं बूंदी वासियों को नवरात्री, दशहरा तथा दीपावली की हार्दिक शुभकामनायें |

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியை பிடித்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அப்போது நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்கு சதவீதத்தை அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற பாஜக தலைமை இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. அதற்காக பல்வேறு முனைகளில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவிய தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகளின் பொறுப்பு மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது

மேலும் மக்களவைத் தேர்தலையொட்டி ‘லோக்சபை பிரவாஸ் யோஜ்னா' என்ற இயக்கத்தை பாஜக தலைமை தொடங்கியுள்ளது. இதன்படி மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக பலவீனமாக இருக்கும் 160 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பிராந்தியத்தில் பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கு பிராந்தியத்தில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், குஜராத், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக், சண்டிகர், டையூ-டாமன்-தாத்ரா ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தெற்கு பிராந்தியத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான்-நிக்கோபர், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில் தெற்கு பிராந்தியத்தில் பாஜக அதி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 25, தெலங்கானாவில் 4 தொகுதிகள் என 29 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உ.பி.யில் கூட்டணி வியூகம்: உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைத்தன.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 41 சதவீதமாகக் குறைந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதன் காரணமாக அந்த கட்சியின் வாக்கு 32 சதவீதமாக உயர்ந்தது. இதை கருத்தில் கொண்டு வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறிய கட்சிகளுடன் பாஜககைகோத்து வருகிறது.

இதன்படி சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ராஜ்பர் சமூக மக்களின் வாக்கு, நிஷாத் கட்சியின் ஆதரவுடன் மீனவ சமுதாய மக்களின் வாக்குகளை கவர பாஜக திட்டமிட்டு உள்ளது. நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கு, கூட்டணி வியூகம், அதிதீவிர பிரச்சாரத்தால் 350-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் 3-வது முறை ஆட்சி அமைக்க பாஜக வியூகம் வகுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.