புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் 4வது நாளாக இன்றும் (ஜூலை 25) மக்களவை கூடியவுடன் ஒத்திவைக்கப்பட்டது. அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.
மணிப்பூரில் மைதேயி - குகிஸோ பழங்குடி இனங்களுக்கு இடையே நடக்கும் மோதலில் மைதேயி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக சிலர் இழுத்துச் சென்று மானபங்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19-ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
முன்னதாக நேற்று மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரதமர் பேச வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபடுகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால், அதுபற்றி விவாதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.