புதுடெல்லி: என்டிஏ கூட்டணி தேச நலன் கருதி இணைந்த கூட்டணி. இதை யாராலும் உடைக்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில் இதில் 38 கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸ் கூட்டணியைவிட தங்களின் கூட்டணி எத்தகைய வலிமையான கூட்டணி என்பது குறித்து ஒப்பீடு செய்து விளக்கியுள்ளார்.
பெங்களூருவில் இன்று 2வது நாளாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் சூழலில் ஜட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியின் வலிமை குறித்து நட்டா கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரத்துக்காக இணைந்த கூட்டணி அல்ல. இது சேவைக்காக இணைந்த கூட்டணி. இது இந்தியாவை வலிமைப்படுத்தும் கூட்டணி. பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் ஆகியனவற்றால் இணைந்த கூட்டணி.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இலக்கும் இல்லை, கொள்கையும் இல்லை. முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. ஊழல்களாலும் மோசடிகளாலும் நிறைந்த கூட்டணி.
எனவேதான் 2024ல் மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் அட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர். எங்கள் கூட்டணி தேச நலன் கருதி இணைந்த கூட்டணி. இதை யாராலும் உடைக்க முடியாது" என்றார்.