பொது சிவில் சட்டமானது இஸ்லாமியா்களுக்கு எதிரானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது. எனவே, இஸ்லாமியா் உள்ளிட்டோா் அச்சப்படத் தேவையில்லை என்றாா் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பொது சிவில் சட்டம் மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் உருவானது. அனைவருக்கும் பொதுவானது. அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. எனவே, இஸ்லாமியா் உள்ளிட்டோா் அச்சப்படத் தேவையில்லை என்றும், அதை எதிர்க்க வேண்டாம் என்று இஸ்லாமியா்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஒவ்வொரு சாதியின் சதவிகிதத்தின் உண்மையான தகவலைக் கண்டறிய அனைத்து சாதியினர்களுக்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
மேலும், 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சித் தலைவர்களை முன்னிறுத்துகின்றன, அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதமா் மோடியையே மீண்டும் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தலில் 543 இடங்களில் நிச்சயமாக 325 முதல் 350 இடங்கள் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றார் அத்வாலே.