புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வலியுறுத்தியும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடைநீக்கத்தைக் கண்டித்தும் 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார்.
पटौदी इंटरप्राइजेज एवं अलगोजा रिसोर्ट - बूंदी
पटौदी इंटरप्राइजेज एवं अलगोजा रिसोर्ट कीऔर से बूंदी वासियों को दीपावली की हार्दिक बधाई व शुभकामनाएं
மணிப்பூரில் மைதேயி - குகிஸோ பழங்குடி இனங்களுக்கு இடையே நடக்கும் மோதலில் மைதேயி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக சிலர் இழுத்துச் சென்று மானபங்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19-ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், எதிர்க்கட்சி அணியினர் நேற்று விடிய விடிய நடத்திய போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர். மணிப்பூர் பிரச்சினை மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் அஜய் சிங் இடைநீக்கம் ஆகியனவற்றை முன்னிறுத்தி போராடி வருகின்றனர்.
மாநிலங்களவையில் நோட்டீஸ்: இந்நிலையில் இன்று 4வது நாளாக அவை கூடவிருக்கிறது. விதி எண் 267-ன் கீழ் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி. கேள்வி: மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், ”என்னை ஏன் அவைத் தலைவர் இடைநீக்கம் செய்தார் என்று நான் கேட்கமாட்டேன். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்க அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்பதை தொடர்ந்து கேட்பேன். பிரதமர் நாடாளுமன்றம் வந்து இவ்விவகாரம் பற்றி பேச வேண்டும் என்பது மட்டுமே எங்களின் கோரிக்கை” என்று கூறியுள்ளார்.
'36 விநாடிகள் பேசிய பிரதமர்' முன்னதாக நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
வெறும் 36 விநாடிகளில் ஒரு பிரச்சினையைப் பற்றி பிரதமர் பேசிச் சென்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதோடு நாடாளுமன்றத்தில் அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.