புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ‘இண்டியா’ கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிஎம்.பி.க்கள் நேற்று காலை 10 மணி அளவில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியபோது, ‘‘மணிப்பூர் மாநிலத்தின் உண்மையான நிலவரம் என்னஎன்பது குறித்து மக்களவை, மாநிலங்களவையில் பிரதமர் மோடி நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்துக்கு வருவதையே தவிர்த்து, தனது அலுவலகத்திலேயே அமர்ந்திருக்கிறார். இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அரை மணி நேரம் விவாதம் நடத்தினால் போதும் என்று அரசு தரப்பு கூறுவதை ஏற்க மாட்டோம்’’ என்றார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாககுற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கம்,பிஹாரிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தால், நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிலையில், காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ‘‘விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சியினர், பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அமித் ஷா விளக்கம்: பிற்பகலில் மக்களவை கூடியபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவர் கூறும்போது, ‘‘மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், எதிர்க்கட்சிகள்தான் ஒத்துழைக்க மறுக்கின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அமளி அதிகமானதால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அவைத் தலைவர் இருக்கைக்கு அருகே சென்று மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி கோஷமிட்டார். இருக்கைக்கு திரும்புமாறு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பலமுறை அறிவுறுத்தியும் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டத் தொடர் முழுவதும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணிக்குஅவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் கூடியபோதும் அமளி நிலவியதால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.